சென்னை: சென்னையில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய கடலோர காவல்படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய கட்டிடத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். சென்னையில் மண்டல கடல் மாசு குறைப்பு மையம் மற்றும் புதுச்சேரியில் கடலோர காவல்படை விமான தளத்தையும் திறந்து வைத்தார்.
புதிய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், கடலில் சிக்கியுள்ள கடற்படையினர் மற்றும் மீனவர்களுக்கான மீட்பு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பையும் செயல்திறனையும் மேம்படுத்தும். இந்த அதிநவீன வசதி இந்திய கடலோர காவல்படைக்கு கடலில் உள்ள உயிர்களை பாதுகாக்கவும், நெருக்கடியான சூழ்நிலைகளில் விரைவான நடவடிக்கை எடுக்கவும் உதவும்.
முன்னோடி மையம்: சென்னை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள கடலோர காவல்படையின் மண்டல கடல் மாசு மீட்பு மையம் கடல் மாசு மேலாண்மையில் முன்னோடியாக திகழ்கிறது. இப்பகுதியில் முதல் முறையாக, எண்ணெய் மற்றும் இரசாயன கசிவுகளை ஒருங்கிணைப்பதில், குறிப்பாக கடலோர மாநிலங்களை ஒட்டியுள்ள நீர்நிலைகளில் முக்கிய பங்கு வகிக்கும்.
திறன் மேம்பாடு: புதுச்சேரியில் உள்ள கடலோர காவல்படை விமானப்படை தளம், புதுச்சேரி மற்றும் தென் தமிழக கடற்கரையோரங்களில் கடல் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த வளாகத்தில் சேடக் மற்றும் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் படைகள் வான்வழி கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை திறன்களை மேம்படுத்தும்.
இந்நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல தளபதி ஐஜி டோனி மைக்கேல், இந்திய ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர் சிங் பிரார், எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.