சென்னை: இலவச மின் இணைப்புகள் பெற்று விவசாயத்திற்கு பயன்படுத்தாமல் உள்ள மின் இணைப்புகளின் விவரங்களை கணக்கெடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இதற்கான செலவை தமிழக அரசு மின்சார வாரியத்திற்கு மானியம் வழங்குகிறது. தமிழகத்தில் தற்போது 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. ஒரு இணைப்புக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் செலவாகும்.
விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தால் வேளாண் துறைக்கு ஆண்டுக்கு ரூ.7,280 கோடி செலவாகிறது. சிலர் விவசாய இணைப்பு பெற்று, அந்த மின்சாரத்தை விவசாயம் அல்லாத தேவைகளுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், விவசாய மின் இணைப்பை பெற்று, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாத, நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத இணைப்புகளை கணக்கெடுத்து, 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க, வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்போது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கியுள்ளன. அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை தங்கள் நிலங்களில் பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. போன்ற விவரங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க அரசு சர்வே நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இப்பணிகளை மாவட்ட வாரியாக பார்வையிட்டு கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.