சென்னை: போக்குவரத்துக் கழக பிரச்னைகளை மக்களிடம் கொண்டு செல்ல அண்ணா தொழிற்சங்கத்தினர் 5 லட்சம் நோட்டீஸ் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 4 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதை ஏற்க முடியாது என்றாலும், 14வது ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாமல் தற்போது 5 ஆண்டுகள் ஆகிறது. அதேபோல், போக்குவரத்துக் கழகங்களின் பிரச்னைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் நோட்டீஸ் விநியோகிக்க அண்ணா தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக போக்குவரத்து கழக பிரச்னைகள் அடங்கிய 5 லட்சம் நோட்டீஸ்கள் அச்சிடப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொழிற்சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்கும் வகையில் விநியோகிக்கப்படும் என்றார். முன்னதாக அண்ணா தொழிற்சங்க பேரவை தலைமையில் போக்குவரத்து பிரிவில் உள்ள 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் தாடி எம்.ராசு தலைமை வகித்தார்.
செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். இதில், வரும் 27ம் தேதி நடைபெறும் போக்குவரத்து ஊழியர்களின் 15வது சம்பள உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையில், கூட்டமைப்பு சார்பில் பொது கோரிக்கையை முன்வைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.