மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி 2023-24 நிதியாண்டில் தனது பணிக்கான ஊதியமாக ஒரு ரூபாய் கூட பெறவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் 2020-21 நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எந்த சம்பளத்தையும் வாங்காது என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். அது அடுத்தடுத்த நிதியாண்டுகளிலும் தொடர்ந்தது. இந்நிலையில், தொடர்ந்து நான்காவது முறையாக 2023-24ம் நிதியாண்டில் சம்பளம் எதுவும் பெறவில்லை. அதே நேரத்தில், நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளின் ஊதியம் கணிசமாக அதிகரித்துள்ளது.
அம்பானியின் வீட்டுப் பணியாளர்களான சமையல்காரர்கள், காவலர்கள், வீட்டு பராமரிப்புப் பணியாளர்களுக்கு கணிசமான சம்பளம் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான வீடியோவில், கார் ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24 லட்சம் ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 114 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி, உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார்.
அவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், சில்லறை விற்பனை, தொலைத்தொடர்பு போன்றவற்றில் தீவிரமாக உள்ளது. முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் சமீபத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. திருமணச் செலவு ரூ.5,000 கோடி.