சென்னை: ஜெய்ப்பூரில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த 1,700 கிலோ சுகாதாரமற்ற ஆட்டிறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஆட்டிறைச்சி ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர், ஜெய்ப்பூர் வழியாக வரும் பிகானீர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, எழும்பூர் ரயில் நிலையம் வந்தவுடன் ரயிலைச் சோதனை செய்தனர். அப்போது, சட்ட விரோதமாக ரயிலில் கொண்டு வரப்பட்ட 1,700 கிலோ ஆட்டிறைச்சி அடங்கிய 26 தெர்மாகோல் பெட்டிகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.12 லட்சம். பின்னர் இவற்றில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனடியாக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: முதல் கட்ட விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம் சிக்கந்தரில் உள்ள தெர்மாகோல் பெட்டிகளில் ஆட்டிறைச்சி அடைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து 250 கிமீ தொலைவில் உள்ள ஜெய்ப்பூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆடு வெட்டப்பட்டதில் இருந்து இன்று வரை 4 நாட்களுக்கும் மேலாக ஆட்டிறைச்சி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.
சரியான பதப்படுத்தும் கருவிகள் இல்லாமல் இறைச்சியை அதிக நேரம் வைத்திருக்கக்கூடாது. அப்படியே வைத்திருந்தால் கெட்டுவிடும். சென்னையில் உள்ள பல கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக இந்த இறைச்சிகள் முறையான மருத்துவ சான்றிதழ் இல்லாமல் கொண்டு வரப்படுகின்றன.
இவை எந்தெந்த கடைகளுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டது, யார் கொண்டு வந்தனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன இறைச்சிகள் அனைத்தும் முறையாக அகற்றுவதற்காக மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மதுரை செல்லும் இந்த ரயிலில் இறைச்சி பெட்டிகள் அதிகம். அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் அடுத்தடுத்த மாவட்டங்களில் அவற்றை பறிமுதல் செய்யவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கூறியது இதுதான்.