பழனியில் நாளை ஆகஸ்ட் 24 ஆம் தேதி துவங்கவுள்ள முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ஒரு லட்சம் பேருக்கு உணவு, பஞ்சாமிர்தம், குங்குமம், விபூதி மற்றும் முருகன் புகைப்படங்கள் அடங்கிய பிரசாதம் வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டில் 1300 ஆய்வுக் கட்டுரைகள், ஐந்து ஆய்வகங்கள், 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விருந்தினர்கள், 4 நீதி அரசர்கள், 15 ஆதீனங்கள் மற்றும் 30 ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்ளப்போவதாகவும், முருகன் புகழை விளக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், கும்மியாட்டம் மற்றும் கந்த சஷ்டி கவசம் என இரண்டு நாட்களும் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் பல இடத்திலும் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் 8000 பக்தர்கள் அமர்வதற்கான பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 30,000 பேருக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள், மருத்துவ வாகனங்கள், குடிநீர் வசதிகள் மற்றும் டாய்லெட் வசதிகள் ஆகியவை செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பெரிதாகவும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பதால், பாதுகாப்பு மிகுந்த கவனத்துடன் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு, பல்வேறு தரப்பினரையும் திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டுள்ளது.