புதுடெல்லி: கடந்த ஜூலை மாதம், யூபிஐ மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.20.6 லட்சம் கோடி பரிவர்த்தனை நடந்துள்ளது. பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, பேபால், சீனாவின் அலிபே மற்றும் பிரேசிலின் பிக்ஸ் ஆகியவற்றை விட அதிகமான பரிவர்த்தனைகளை யுபிஐ செய்துள்ளது.
இந்தியாவில் நடக்கும் பண பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. PaySecure வெளியிட்ட தரவுகளின்படி, UPI மூலம் வினாடிக்கு 3,729 பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றன.
இது 2022 உடன் ஒப்பிடும் போது 58 சதவீதம் அதிகமாகும். PaySecure அமைப்பு உலகளவில் 40 டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களை ஒப்பிட்டு இந்த விவரங்களை வெளியிட்டது.
இதன் அடிப்படையில், யுபிஐ உலகளவில் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் தளமாகும். கடந்த ஜூன் மாதம் UPI மூலம் 1,400 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அடுத்த 15 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ரூ.10,000 கோடியாக உயரும் என எதிர்பார்ப்பதாக என்பிசிஐயின் தலைமை நிர்வாக அதிகாரி திலிப் ஆஸ்பே தெரிவித்துள்ளார்.
இப்போது வெளிநாடுகளிலும் UPI பரிவர்த்தனைகளுக்கான கட்டமைப்பை உருவாக்கும் பணியில் இந்தியா இறங்கியுள்ளது. UPI சேவையில் குரல் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண் அல்லது UPI எண்ணை தட்டச்சு செய்ய வேண்டியதில்லை. அவர்கள் குரல் மூலம் நுழைந்து பரிவர்த்தனை செய்யலாம்.