தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முறைகேடு நடந்ததாக கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
2014 முதல் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்றைய தேதி வரை மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள், ஒப்பந்தங்கள் ஆகியவைகளில் ஏற்பட்டுள்ள நிதிமுறைகேடுகள், தரமற்ற பணிகள் குறித்து முழுமையான விசாரணை வேண்டும்.
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில் 2018 முதல் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை மற்றும் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் அலகு பலகோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்ட இயந்திரங்கள் பழுதடைந்து செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் அத்திட்டத்திற்காக செலவிடப்பட்ட அரசு நிதி பொது மக்களுக்கு யாதொரு பயனுமின்றி வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே அத்திட்டத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள், ஒப்பந்தக்காரர்களின் செயல்பாடுகள் அவைகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை வேண்டும்.
தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்கள் வாடகைக்கு விடப்பட்டதில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்புடைய நபர்கள் குறித்து முழு விசராணை வேண்டும். சிவகங்கை பூங்காவில் பல கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்ட சிவகங்கை பூங்கா புனரமைப்பு திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த முழு விசாரணை வேண்டும். மேலும் சிவகங்கை பூங்காவில் சந்தனமரம், குமுழ் தேக்கு, ஈட்டி மரம், ரயில்தண்டவாளம், பழைய கட்டிடங்களில் உள்ள பர்மா தேக்கு போன்றவைகளில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை விரிவாக்கப்பகுதிகளில் அமைக்கப்பட்ட பூங்காக்கள் மற்றும் மழைநீர் வடிகால் அமைத்ததில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை வேண்டும்
மேற்கண்ட பணிகளில் மிகப்பெரிய நிதி மோசடி நடைபெற்று இருக்கிறது. ஆகவே தாங்கள் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் தஞ்சாவூர் மாவட்ட மாநகர செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர்.