புதுடில்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் வருமானத்தை அதிகரிக்க டிஜிட்டல் விவசாயம், உணவு பாதுகாப்பு, கல்வி, நிலையான விவசாயம் உள்ளிட்ட 7 முக்கிய திட்டங்களுக்கு மொத்தம் ரூ.13,966 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் டிஜிட்டல் விவசாயத் திட்டம் மிக முக்கியமான திட்டமாகும். இதற்காக ரூ.2,817 கோடி ஒதுக்கப்படும். தொழில்நுட்ப மேம்பாடுகள் மூலம் திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதன் மூலம் விவசாயத் துறையை நவீனமயமாக்க இந்தத் திட்டம் உதவும்.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான பயிர் அறிவியல் திட்டத்திற்கு ரூ.3,979 கோடி ஒதுக்கப்படும். பயிர் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை அதிகரிப்பது மற்றும் பொதுமக்களுக்கு சிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
வேளாண் கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியல் துறைகளை வலுப்படுத்த 2,291 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இந்த நிதி நாடு முழுவதும் விவசாய கல்வி மற்றும் மேலாண்மை திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.
இத்திட்டத்தை வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் செயல்படுத்தும். நிலையான விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டிற்காக 1,702 கோடி ஒதுக்கப்படும். கால்நடைகள் மற்றும் பால் உற்பத்தி மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதே இதன் நோக்கம்.
நிலையான தோட்டக்கலை வளர்ச்சிக்கு 860 கோடி ஒதுக்கப்படும். தோட்டக்கலை பயிர்களின் தரம் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க இந்த நிதி பயன்படுத்தப்படும். இதன் மூலம் விவசாயத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இந்தத் துறை முக்கியப் பங்காற்ற முடியும்.
மேலும், விவசாய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கிரிஷி அறிவியல் மையங்களை வலுப்படுத்த ரூ.1,202 கோடி ஒதுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.