சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்கோனாவில் 1 செ.மீ மழை பெய்துள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. சூறாவளி காற்று வீசக்கூடும்.
தென்மேற்கு வங்கக் கடலில் வடகிழக்கு கடற்கரையில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ. சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.