சென்னை: வாடல் நோய் தாக்குதல் அறிகுறி… தென்னை மற்றும் எண்ணெய்ப்பனை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் வயல்களில் பரவலாக வாடல் நோய் தாக்குதலின் அறிகுறிகள் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நோய் தாக்கப்பட்ட மரத்தின் அடிப்பாகத்தில் இருந்து சுமார் 3 அடி உயரம் வரை பழுப்பு நிறத்தில் சாறு வடியும். அவ்வாறு சாறு வடியும் மரத்தின் தண்டு பகுதியை வெட்டிப் பார்த்தால் தண்டு பகுதியானது அழுகி நிறம் மாறி காணப்படும். மரத்தின் ஓலைகள் வெளிர்மஞ்சள் நிறமாகி பின்பு அடிமட்டைகள் அனைத்தும் பழுப்படைந்து காய்ந்து மரத்தோடு ஒட்டி தொங்கும். இது இழுத்தால் கையோடு வராது. வேர்களும் அதிக அளவில் அழுகி நிறம் மாறி எண்ணிக்கையில் குறைந்து காணப்படும்.
சில நேரங்களில் அனைத்து இளம் காய்களும் கொட்டிவிடும். இதனால் மரத்தின் வளர்ச்சி பாதிப்படைந்து மகசூல் இழப்பு நேரிடும். நோயை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட, அவற்றிற்கு அருகிலுள்ள தென்னை மரங்களுக்கு 2 மில்லி ஹெக்சகோனசால் என்ற பூஞ்சான கொல்லி மருந்தை 100 மில்லி தண்ணீரில் கலந்து பாலித்தீன் பைகள் கொண்டு வேர் மூலம் 4 மாத இடைவெளியில் உட் செலுத்துதல் வேண்டும்.
பாதிக்கப்பட்ட மரங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உர அளவுகளுடன் கூடுதலாக 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு, டிரைக்கோ டெர்மா விரிடி 200 கிராம் என்ற அளவில் 10 கிலோ மக்கிய சாண எருவுடன் கலந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை இடுவதன் மூலம் மரத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கலாம்.