ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18, 25 மற்றும் அக்டோபர் 1-ம் தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அக்டோபர் 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் நடந்த தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் முழுவதும், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது 96 வழக்குகளும், அரசு ஊழியர்கள் மீது 53 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 86 ஆதாரமற்றவை அல்லது தவறானவை எனக் கண்டறியப்பட்டு கைவிடப்பட்டது. நகரில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.