கோவை: கோவை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய பொதுமக்கள் மற்றும் அமைப்பினருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் மூலம் மாசு ஏற்படுத்தாத சிலைகளை அப்புறப்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கோவை காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்தண்ணன் குளம், பவானி ஆறு (சிறுமுகை, பழத்தோட்டம், எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் மற்றும் தேக்கம்பட்டி). அம்பராம்பாளையம் ஆறு (ஆனைமலை, காளிபாக் கவுண்டன்புதூர்). நொய்யல் ஆறு (ராவுத்தூர் பிரிவு). ஆச்சான் குளம், நீலாம்பூர், உப்பாறு (ஆனைமலை முக்கோணம் அருகில்), நடுமலை ஆறு, வால்பாறை, சாடிவயல், வாளையார் அணை, குறிச்சிக்குளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளத்தேரி, வெள்ளக்கிணறு குளம், நாகராஜபுரம் குளம், பிஏபி வடிகால், நூற்றாண்டு பிரிவு, சாமளாபுரம் குளம் (திருப்பூர் மாவட்டம்), பிஏபி வடிகால், கெடிமேடு (திருப்பூர் மாவட்டம்) ஆகிய இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் விசர்ஜனம் செய்ய வேண்டும், மேலும் போலீசார் அனுமதித்த வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.
அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.