சீனா: தனது தாய் நாட்டின் தலைவிதியை மாற்றி காட்டிய மாபெரும் தலைவர் தான் மாவோ எனப்படும் மா சே துங். மா சே துங் நிகழ்த்திய மாற்றங்கள் என்ன என்பதையும் அவருடைய அரசியல் பயணத்தின் பல முக்கியமான நிகழ்வுகளை காண்போம். இன்று அவரது நினைவு நாள்.
சீனாவின் வளர்ச்சிப்பாதையில் மறுக்க முடியாத பல மாற்றங்களையும் மறைக்க முடியாத பல ஏற்றங்களையும் நிகழ்த்திய ஓர் மிகப்பெரும் தலைவர் மா சே துங்.போர் என்பது ஆயுதம் ஏந்தும் அரசியல்.அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர் என்று சீன அரசியல் வரலாற்றில் மட்டுமல்லாமல் உலக அரசியல் வரலாற்றிலும் ஒரு புதிய அரசியல் இலக்கணத்தை வகுத்து கொடுத்த மா சே துங் ஓர் அரசியல் தலைவராக மட்டுமின்றி ஓர் புரட்சிகர சிந்தனையாளராகவும் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகிறார்.
மாவோ எனப்படும் மா சே துங் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷாவ்ஷான் சுங் என்னும் கிராமத்தில் கி பி 1893 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள் பிறந்தார்.இவருடைய பெற்றோர் மா ஷென் செங் மற்றும் வென் குய் மெய்.மாவோவின் தந்தை சீன ராணுவத்தில் கொஞ்ச நாட்கள் பணி செய்த பிறகு தன் சொந்த கிராமத்திற்கு திரும்பி விவசாயம் செய்ய தொடங்குகிறார். ஆரம்பத்தில் சிறு விவசாயியாக இருக்கும் அவர், நாளடைவில் விவசாயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட அதிக அளவில் விவசாயம் செய்ய தொடங்கி ஓரளவு வசதியான நிலைக்கு மாறுகிறார்.விவசாய வேலைகளுக்கு கூலி ஆட்களை பயன்படுத்திய மாவோவின் தந்தையார் மாதத்தின் முதல் பிறை அன்று அவர்களுக்கு கூலி கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
கிராமப் புற சூழ்நிலையில் பிறந்து இளமையில் இருந்தே உடல் உழைப்பில் ஈடுபடுபவராக இருந்ததனால் மாவோ மற்ற விவசாயிகளின் துன்பங்களையும் துயரங்களையும் நேரடியாக உணரும் வாய்ப்பை பெற்றிருந்தார்.அதனால் அவருக்கு இயல்பாகவே எளிய மக்களின் துயர் துடைப்பதில் ஓர் உணர்வுப்பூர்வமான ஈடுபாடு இருந்து வந்தது. பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஊச்சாங் கலவரம் என்ற மக்கள் புரட்சி அப்போதைய சீன மஞ்சூ ஆட்சிக்கு எதிராக நடக்க தொடங்கியது . இந்த புரட்சியில் கலந்து கொள்ள விரும்பிய மாவோ தன் 18 வயதில் அந்த புரட்சியை தலைமை தாங்கி நடத்திய ஒரு புரட்சிப்படை ராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்தார் . இந்த புரட்சியின் மூலம் மஞ்சூ ஆட்சி ஹுனான் மாகாணத்தில் முடிவுக்கு வந்தது.இதற்கு பிறகு சோஷலிச கருத்துக்களின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் அது தொடர்பான நூல்களை படிக்க தொடங்குகிறார் மாவோ.பிறகு ராணுவத்தில் இருந்தும் விலகி மீண்டும் வேறொரு பள்ளியில் தன் படிப்பை தொடர்கிறார்.பிறகு இந்த பள்ளியில் இருந்தும் விலகிய மாவோ.ஹூனானில் உள்ள ஆரம்ப முதல் தரப்பள்ளியில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் பயில்கிறார்.இந்த பள்ளியில் படிக்கும்போது தன் பள்ளி தோழர்களை ஒருங்கிணைக்கும் மாவோ.
ஒரு சிறந்த இயக்க ஒருங்கிணைப்பாளராகவும் சிறந்த மக்கள் தலைவராகவும் மாற்றம் பெறுகிறார்.அதற்கு முக்கிய காரணம் இந்த பள்ளியில் சேர்வதற்கு முன் அவர் பல்வேறு புத்தகங்களை மிக தீவிரமாக வாசித்து தன் வாசிப்பறிவை வளர்த்துக் கொண்டிருந்தார் என்பதே ஆகும். 1912 ல் மன்ச்சூ ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் உருவான சீன குடியரசு ஆட்சி சன்யாட்சென் தலைமையில் நடந்து கொண்டிருந்தது . சன்யாட்சென் மிகச்சிறந்த அறிவாளியாக இருந்தாலும் அவரின் நிர்வாக குளறுபடிகளால் நில பிரபுக்கள் நாடு முழுவதும் கலகம் செய்து வந்தனர்.மேலும் சீனா பல்வேறு ஆக்கிரமிப்புகளையும் சந்தித்து கொண்டிருந்தது . இதனால் கோபம் கொண்ட சீன இளைஞர்கள் மே நான்கு என்ற இயக்கத்தை உருவாக்கி அரசுக்கு எதிராக போராட துவங்கினார்கள் . லீ தசாவ் மற்றும் சென் டுக்சியு ஆகிய இருவருமே மே நான்கு இயக்கத்தின் அடித்தளமாக இருந்து செயல்பட்டார்கள் . மாவோவும் இந்த இயக்கத்தில் இணைந்து செயல்பட துவங்கினார் . பிறகு இந்த இயக்கத்தின் நீட்சியாகத் தான் 1921 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட்கட்சி உதயமானது
1923 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி சன் யாட் சென்னின் குவாமின் டாங் எனப்படும் சீன தேசிய வாத கட்சியுடன் கூட்டணி அமைக்கிறது. சீன தேசியவாத கட்சியுடன் இணைந்த முதல் கம்யூனிஸ்ட் ஆக அறியப்படுகிறார் மாவோ . ஆனால் 1925 ல் சன் யாட் சென்னின் மறைவுக்கு பிறகு குவாமின் டாங் கட்சியையும் அதன் ஆட்சியையும் சியாங் கை ஷேக் கைப்பற்றுகிறார். சியாங் கை ஷேக் கிற்கு சோவியத் ஒன்றியம் ஆதரவு அளித்தாலும் அவர் சீன கம்யூனிஸ்ட்களுடன் விரோத போக்கையே கடை பிடித்து வந்தார் . சீன கம்யூனிஸ்ட்டுகளை ஒழித்துக்கட்ட அவர் எடுத்த முயற்சிகளுக்கு எதிராக உருவானது தான் மக்கள் விடுதலை ராணுவம் . 1927 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி உருவான மக்கள் ராணுவம் சீன மக்களை ஒன்றிணைத்து நடத்திய பல உள்நாட்டு போர்கள் சீன வரலாற்றை வேறு திசை நோக்கி அழைத்து சென்றது .
1949 ஆம் ஆண்டு சீனாவின் ஆட்சி அதிகாரம் சீனாவின் பொதுவுடைமை கட்சியின் தலைவர் என்கிற முறையில் மாவோ வின் கீழ் வந்தது . ஆட்சியை கைப்பற்றிய மாவோ புதிய சீனாவை உருவாக்க வேண்டிய பணியை மிக முக்கியமான ஒன்றாக கருதினார் . பழமைவாதமும் வறுமையும் சீனாவின் அனைத்து பகுதிகளிலும் நீக்கமற நிரம்பி இருந்தது . மக்கள் 30 ஆண்டுகால உள்நாட்டு போர்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தனர் . துயரத்தின் பிடிகளில் சிக்கிக் கொண்டிருந்த சீனாவை மீட்டெடுக்க பல புதிய திட்டங்களையும் கொள்கைகளையும் உருவாக்கினார் மாவோ. பரீட்சார்த்தமான அந்த திட்டங்கள் சமூகத்தில் பெரும் விளைவுகளை எதிர்கொண்டன.
வலிமையையும் வளமும் மிகுந்த சீனாவை உருவாக்குவதே மாவோ வின் உறுதியான இலக்காக இருந்தது. தொழில்துறையை வளர்ச்சி அடைய செய்வதன் மூலமே சமூக மாற்றத்தை எளிதாக நிகழ்த்த முடியும் என்று அவர் திடமாக நம்பினார்.தொழில்துறை மேம்பாட்டில் சோவியத்தை முன் மாதிரியாக கொண்டு முன்னோக்கிய பெரும்பாய்ச்சல் என்ற திட்டத்தை செயல்படுத்தினார் .
1966 ஆம் ஆண்டு மே 16 ஆம் நாள் சீன பண்பாட்டுப் புரட்சியை அறிவித்தார் மாவோ. சீனாவில் மீண்டும் முதலாளித்துவ ஆட்சி ஏற்படுவதற்கான முயற்சிகளை ஒடுக்குவதற்காகவும். சீனாவின் திட்டங்கள் பெரும்பாலும் சோவியத்தை பின்பற்றி இருப்பதால் தனது தனித்துவத்தை சீன வரலாற்றில் ஏற்படுத்தும் விதமாக இதை வடிவமைத்தார். 1968 ஆம் ஆண்டு பண்பாட்டு புரட்சியை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தாலும் 1976 ஆம் ஆண்டுவரை அது தொடர்ந்ததாகவே கருதப்படுகிறது . பொதுவுடைமை அரசியல் வரலாற்றில் எப்போதும் கொண்டாடப்படும் தலைவராக இருந்து வரும் மாவோ 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் நாள் இவ்வுலக வாழ்வில் இருந்து விடை பெற்றார்.