விசாகப்பட்டினம்: ஒடிசா மாநிலம் பூரி அருகே புயல் கரையை கடந்ததால் கடலோர ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், அல்லூரி சீதாராம ராஜு, விஜயநகரம், ஸ்ரீகாகுளம், பார்வதி மன்யம், அனகாபள்ளி ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.
வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக மேற்கண்ட மாவட்டங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. கோனசீமா, காக்கிநாடா, என்டிஆர், கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அல்லூரி மாவட்டத்தில் 13 செ.மீ மழையும், விஜயநகரம் மாவட்டத்தில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக 24 மணி நேரமும் உஷாராக பணியாற்றுமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று பெய்த கனமழையால் அல்லூரி மாவட்டம் சட்ராயப்பள்ளியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். மீட்புப் படையினர் 4 பேரை மீட்டனர். நர்சிபட்டினம்-பத்ராசலம் தேசிய நெடுஞ்சாலையில் 12 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால், 16 கி.மீ., வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று பார்வையிட்டார்.
கடந்த 9 நாட்களாக வீட்டுக்கு வராத இவர், விஜயவாடா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பணிபுரிந்து வருகிறார். தினமும் 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே பேருந்தில் தூங்கி மக்களுக்காக உழைக்கிறார்.
வெள்ள நிவாரண நிதிக்கு உதவ பலரும் முன்வர வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யா நிகேதன் பள்ளி மாணவர்கள் வரிசையாக அவரிடம் வந்து தங்களிடம் இருந்த ரூ.31 ஆயிரத்தை முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கினர்.
இதை ‘சிறிய வயது பெரிய வயது’ என சந்திரபாபு நாயுடு பாராட்டியுள்ளார்.