நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த தர்மன் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் கடந்த 9-ம் தேதி அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், தேவராஜ், கார்த்திகேயன், சதீஷ் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகை கடற்படை கப்பலுடன் மோதி தாக்கியதாக கூறப்படுகிறது.
கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் ஃபைபர் படகு கவிழ்ந்தது. இதில் மீனவர்கள் கடலில் காயங்களுடன் வலையில் சிக்கி தவிக்கின்றனர். இதையடுத்து, மீனவர்களை தங்கள் கப்பலில் ஏற்றிச் சென்ற இலங்கை கடற்படையினர், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமல் சுமார் 6 மணி நேரம் மிரட்டி விசாரித்தனர்.
அப்போது, தமிழக மீனவர்கள் தங்கள் எல்லைக்குள் மீன்பிடித்து வருவதாக இலங்கை கடற்படை அதிகாரிகளிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. அதன்பின், செருதூர் மீனவர்களை, சக தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படை அதிகாரிகள் ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டனர்.
அதனையடுத்து நடுக்கடலில் கவிழ்ந்த படகை சக மீனவர்கள் உதவியுடன் நாகை மீனவர்கள் மீட்டு காயங்களுடன் இன்று (புதன்கிழமை) காலை கரை திரும்பினர். கப்பலில் இலங்கை கடற்படை அதிகாரிகள் மோதியதில் ரூ.5000 மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
படகில் இருந்த வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன், மீன்பிடி தளவாட பொருட்கள் என 6.50 லட்சம் கடலில் விழுந்து மூழ்கின. இதனிடையே, செருத்தூர் மீன் இறங்குதுறைக்கு வந்த காயமடைந்த மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்களும், இலங்கை கடற்படையினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.