சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் 3-ம் கட்டமாக 127 புத்தகங்களை வடிவமைத்து வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 53 புத்தகங்களின் ரூ.90 லட்சத்து 45,018 பிரதிகள் அச்சிடப்பட்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இந்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் (2024-25) 70 புத்தகங்களின் 1 கோடியே 31 லட்சத்து 68,048 பிரதிகள் மற்றும் வாசிப்பு வழிகாட்டி அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் அவை வடிவமைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. இதையடுத்து 127 புதிய புத்தகங்கள் வாசிப்பு இயக்கத்திற்காக வடிவமைக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், “செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கியிருக்கும் மாணவர்களை நெறிப்படுத்த வாசிப்பு உதவும்.
எனவே, வாசிப்பு இயக்கத்தை தீவிரப்படுத்தி மாணவர்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 124 புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 2 கட்டங்களாக பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
அடுத்த கட்டமாக 127 புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படும். இதற்கான புத்தக தயாரிப்பு பட்டறைகள் விரைவில் தொடங்கப்படும். பணிகள் முடிந்த பிறகு சுமார் 2.2 கோடி பிரதிகள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
இப்பணிகளை நடப்பு கல்வியாண்டிலேயே முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்றார்.