சென்னை: ஆதார் அட்டை இந்திய மக்களின் அடையாளம். வங்கிக் கணக்கு தொடங்குவதில் இருந்து பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து அரசு சேவைகளையும் பெற ஆதார் அட்டை கட்டாயம்.
எனவே தற்போது அனைவரிடமும் ஆதார் அட்டை உள்ளது. இந்நிலையில், ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என ஆதார் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. ஏன் புதுப்பிக்க வேண்டும்?
சிலர் முகவரி, செல்போன் எண்களை மாற்றிக் கொள்கின்றனர். முகங்கள் வித்தியாசமாக இருக்கும், ஆதாரில் பழைய புகைப்படங்கள் இருக்கும், கைரேகைகள் மாற்றப்பட்டால், ரேஷன் கடைகள், வங்கிகள் மற்றும் சிம்கார்டுகள் வாங்கும் இடங்களில் அடையாளச் சான்று வழங்குவதில் சிக்கல் ஏற்படும்.
இவற்றைத் தவிர்க்க 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் கூறுகிறது. இதற்காக, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) அனுப்பப்படும்.
அவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களில் புதுப்பிக்கலாம். அப்போது புதிதாக புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை பதிவு செய்யலாம். இந்நிலையில், ஆதார் திருத்தம் செய்ய வரும் 14-ம் தேதி (சனிக்கிழமை) வரை கால அவகாசம் என தவறான தகவல் பரவியதால், இ-சேவை மையம் மற்றும் ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 55 லட்சம் பேர் ஆதார் அட்டையை புதுப்பித்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூறியதாவது:-
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையை புதுப்பிப்பது மிகவும் நல்லது. புதுப்பிக்கப்படாவிட்டாலும், அட்டை செயலில் இருக்கும். மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் தற்போது 14-ம் தேதிக்குள் அப்டேட் செய்ய வேண்டும் என சிலர் பொய்யான வதந்தியை பரப்பியுள்ளனர்.
அதாவது, புதிய ஆதார் பதிவு தவிர, மற்ற அனைத்து ஆதார் சேவைகளுக்கும் கட்டணம் விதிக்கப்படுகிறது. அதன்படி, ஆதார் மையத்தில் புகைப்படம் மாற்றம், கைரேகை பதிவு, கருவிழி, முகவரி மாற்றம், பெயர் மற்றும் பிறந்த தேதி திருத்தம் போன்ற பணிகளுக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.
ஆனால் பொதுமக்கள் நேரடியாக ஆதார் இணையதளத்தில் முகவரியை மாற்றினால் வரும் 14ம் தேதி வரை கட்டணம் இல்லை. முகவரி மாற்றத்தை இலவசமாக பதிவு செய்யலாம். 14-ம் தேதிக்கு பிறகு இதற்கும் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
இதை தவறாக புரிந்து கொண்டு, ஆதார் எண்ணை 14ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என தவறான தகவலை பரப்பி வருகின்றனர். இதனால் அனைவரும் ஆதார் மற்றும் இ-சேவை மையத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும். ஆதார் அட்டையை புதுப்பிக்க 14-ம் தேதி கடைசி நாள் என்பது முற்றிலும் தவறான செய்தி. உங்கள் ஆதார் அட்டையை எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம்.
அதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.