தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ஜஷிடித்துக்கு வாரம் ஒருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பெண்கள் பெட்டிகள் மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் என மொத்தம் 20 பெட்டிகள் உள்ளன.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7-ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 31) தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ஜஷிடித் பகுதிக்கு செல்லும் ரயிலுக்காக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் வந்து காத்திருந்தனர்.
ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரயில் அங்கு வந்ததும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரயிலில் ஏறினர். ரயிலின் பெண்கள் பெட்டியில் ஏராளமானோர் ஏறியதால் அதில் இருந்த பெண்கள் கூச்சலிட்டனர்.
இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பெண்கள் கோச்களில் ஏறிய ஆண்களை வெளியேற்றி பெண்களை உள்ளே உட்கார வைத்தனர். ஆனால் ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.
பின்னர், ரயில் நிலையத்தை விட்டு வெளியேறியதும், ஆண்கள், பெண்கள் உட்பட பலர் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இதனால் விடுமுறை நாட்களில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக கூடுதல் ரயில்கள் அல்லது கூடுதல் பெட்டிகளை ரயிலில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.