ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் 48 மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் கடந்த வியாழக்கிழமை 151 மி.மீ.மழை பதிவானது.
இதனால் நகரில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் சேதமடையும் அபாயம் உள்ளதாக இந்திய தொல்லியல் துறை கருதியது. இதன்பின், மரபுச் சின்னங்களின் நிலையை கண்காணித்து ஆய்வு செய்யும் பணியை ஊழியர்களிடம் ஒப்படைத்தது.
ஆய்வில், ஆக்ரா கோட்டை, ஃபதேபூர் சிக்ரி, ராம்பாக் அரண்மனை, மேதாப் பாக் அரண்மனை, அக்பரின் கல்லறை, ரோமன் கத்தோலிக்க கல்லறை ஆகிய இடங்களில் ஆங்காங்கே சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக, தாஜ்மஹாலின் மேற்கூரையில் தண்ணீர் கசிந்துள்ளதால், தண்ணீர் உள்ளே புகுந்து, ஷாஜகானின் சமாதியை வந்தடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் ராஜ்குமார் படேல் கூறியதாவது:-
தாஜ்மஹாலின் மேற்கூரையின் எந்த பகுதியில் ஓட்டை ஏற்பட்டு உள்ளே தண்ணீர் புகுந்துள்ளது என்பதை கண்டறியும் பணி நடந்தது. பரிசோதித்ததில் பெட்டகம் ஈரமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கூரையில் பதிக்கப்பட்ட கற்களில் உள்ள மயிரிழை விரிசல் வழியாக தண்ணீர் உள்ளே புகுந்ததாக சந்தேகிக்கிறோம்.
மண்டபத்தின் உள்ளே எந்தெந்த இடங்களில் தண்ணீர் சொட்டுகிறது, ஒரே இடத்தில் தொடர்ந்து சொட்டுகிறதா, இல்லையா என்பதை கண்காணித்து வருகிறோம். இருப்பினும் மழை நின்றவுடன் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தொல்லியல் துறை இயக்குனர் தெரிவித்தார்.