உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆதி கைலாஷ் புனித யாத்திரை சென்றபோது தவகாட் மற்றும் தனக்பூர் செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் கீழே இறங்க முயன்றபோது, வழியில் கற்கள் விழுந்து, திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. முதல்வர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் உயர் அதிகாரிகள் உத்தரகாண்ட் அரசை தொடர்பு கொண்டு தமிழர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
கடலூர் மாவட்ட நிர்வாகம் உத்தரகாண்ட் பித்தோர்கர் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு மீட்பு பணிகளை கண்காணித்து வருகிறது. உத்திரகாண்ட் மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து, அவர்கள் காயமின்றி அருகில் உள்ள முகாமில் தங்கியுள்ளனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின், முகாமில் உள்ள தமிழர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் அவர்களை விரைவாக மீட்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றார். இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு 30 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு தார்சுலா நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஓரிரு நாட்கள் அங்கு தங்கிவிட்டு விமானம் மூலம் தமிழகம் திரும்புவார்கள்.