புதுடெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியா டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று (திங்கட்கிழமை) சந்திக்கிறார்.
இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி ஒருவர் கூறும்போது, “கேஜ்ரிவாலும், சிசோடியாவும் இன்று சந்திக்கவுள்ளனர். முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கெஜ்ரிவால் அறிவித்த பிறகு நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.
இந்த சந்திப்பின் போது டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இருவரும் ஆலோசிப்பார்கள். டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
டெல்லியின் அடுத்த முதலமைச்சராக சுனிதா கெஜ்ரிவால், டெல்லி அமைச்சர்கள் ஆதிஷி, கோபால் ராய், கைலாஷ் கெலாட் ஆகியோர் தேர்வு செய்யப்படலாம் என்று யூகங்கள் உள்ளன.
மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு கடந்த 13-ம் தேதி ஜாமீனில் வெளிவந்தார். ஆனால், அவர் முதல்வர் அலுவலகத்துக்குச் செல்லக் கூடாது.
கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் நேற்று டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அவர், அடுத்த 2 நாட்களில் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன். புதிய முதல்வரை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்வார்கள். நான் நேர்மையற்றவர், ஊழல்வாதி என பாஜக குற்றம் சாட்டுகிறது.
அதனால் நான் அதை ஏற்க மாட்டேன். அடுத்த சட்டசபை தேர்தல் வரை முதல்வர் பதவி. டெல்லியில் உள்ள ஒவ்வொரு தெருவுக்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வருவேன். மக்கள் எனக்கு வாக்களித்து மீண்டும் முதலமைச்சராக்கிய பின்னரே முதல்வர் இருக்கையில் அமருவேன்.
ஆம் ஆத்மியை உடைக்க பாஜக முயற்சிக்கிறது. எங்கள் கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைக்கிறார்கள். லெப்டினன்ட் கவர்னருக்கு கடிதம் எழுதக்கூடாது என மிரட்டினர்.
எனது குடும்பத்தினரை சந்திக்க கூடாது என மிரட்டினர். சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்தால், மாநில முதல்வர்கள் மீது வழக்கு தொடரப்படுகிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி முதல்வர்களுக்கு ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். சிறையில் அடைத்தாலும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாதீர்கள். அரசியலமைப்பு, ஜனநாயகத்தை காப்பாற்ற போராடுங்கள் என கூறினார்.