பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் உள்ள ஆர்.பொன்னாபுரம், முத்தூர், வடக்கிபாளையம், கோட்டூர், ஒடையகுளம், தேவிபட்டினம், சேத்துமடை, அம்பராம்பாளையம், சமத்தூர், அங்கலக்குறிச்சி, பில்சின்னம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் மண்பாண்ட தொழில் நடந்து வருகிறது.
சமையல் பாத்திரம் மட்டுமின்றி நவராத்திரி கொலுபொம்மை, கார்த்திகை திருநாளில் அகல் விளக்கு போன்ற முக்கிய விசேஷங்களின் போது மண்பாண்ட தொழில் மும்முரமாக இருக்கும்.
இதில், ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகையையொட்டி, சுமார் 3 மாதங்களுக்கு முன்பே அகல் விளக்கு தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபடத் தொடங்குகின்றனர். இந்த ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 16-ம் தேதி துவங்குகிறது.
டிசம்பர் 13-ம் தேதி திருக்கார்த்திகை தீப பூஜை நடக்கிறது. தற்போது மழை இல்லாததால் கார்த்திகை மாதத்திற்கு தேவையான அகல் விளக்கு தயாரிக்கும் பணியை மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக இரண்டு வாரங்களாக வெயில் கடுமையாக இருப்பதால் அகல் விளக்குகளை தயாரித்து உலர்த்தும் பணியை தொழிலாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால், அகல் விளக்கு தயாரிப்பதற்கு ஏற்ற தரமான களிமண் கிடைக்காததால், அகல் விளக்கு தயாரிக்கும் களிமண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அகல் விளக்கு விலை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், “பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில், 120-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கிணத்துக்கடவு அருகே உள்ள கோதாவடி குளத்தில், முறையான அனுமதி பெற்று, சமையல் பாத்திரம், பொம்மை, விளக்கு போன்றவற்றை தயாரிக்க, ஆண்டுதோறும் களிமண் எடுக்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன், கோதாவடி குளத்தில் இருந்து வண்டல் மண் எடுக்க தேவை அதிகரித்துள்ளதால், களிமண் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. வரும் திருக்கார்த்திகைக்கான அகல் விளக்கு தயாரிக்கும் பணியை இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கியுள்ளோம்.
கடந்த ஆண்டு 12 எண்கள் கொண்ட ஒரு டஜன் அகல் விளக்குகள் ரூ.12 முதல் ரூ.14 வரை விற்கப்பட்டது. இந்த ஆண்டு ஒரு டஜன் அகல் விளக்குகள் ரூ.15 முதல் ரூ.18 வரை விற்பனை செய்யப்படுகிறது.
போதிய களிமண் கிடைக்காததாலும், கூடுதல் செலவாலும் தவிர்க்க வேண்டியுள்ளது. மேலும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய நிவாரணம் இன்னும் பலருக்கு கிடைக்கவில்லை.
அதற்கு அரசு தீர்வு காண வேண்டும். இந்த ஆண்டு முதல், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.