சென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 8 கோட்டங்களில் உள்ள 26 மண்டலங்களில் உள்ள 317 பணிமனைகளில் இருந்து 10,129 வழித்தடங்களில் 20,232 பேருந்துகளை இயக்கி பொதுமக்களுக்கு சேவை செய்து வருகின்றன.
பாரம்பரிய கட்டண வருவாயைத் தவிர்த்து, தற்போது சரக்குகளை ஏற்றிச் செல்லும் இடங்களில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி சரக்கு போக்குவரத்து துறையில் நுழைய போக்குவரத்து நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
அரசுப் போக்குவரத்துப் பணிமனைகளில் பொருட்களை சேமித்து வைப்பதுடன், இந்த முயற்சியை அரசு-தனியார் கூட்டுத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது அரசாங்கத்திற்கும் தனியார் நிறுவனத்திற்கும் இடையிலான வருவாய் பகிர்வு அல்லது பிற வணிக ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயல்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த, பல்லவன் போக்குவரத்து ஆலோசனை பணிக்குழுவை ஒருங்கிணைப்பாளராக அரசு நியமித்துள்ளது.
இதன் மூலம் புதிய வருவாய் வாய்ப்புகளை அரசு போக்குவரத்து கழகங்கள் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளதாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.