சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நேற்று காலை நடந்தது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்து கூட்டாட்சி கருத்துக்கு எதிரானது. கௌரவமான ஜனநாயகத்தை சேற்றில் புதைக்கும் செயல். பன்மைத்துவத்தில் நம்பிக்கை கொண்ட ஜனநாயகத்தின் பாதுகாவலர்களான மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு, பல்வேறு கலாச்சாரங்கள், நம்பிக்கைகள், பருவங்கள் மற்றும் நில அமைப்பைக் கொண்ட பன்மைத்துவ தேசத்தின் ஜனநாயகத்தை ஒரே கட்சியின் ஆட்சியின் கீழ் கொண்டுவரும் இந்த முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறது.
உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுசீரமைக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதை ஏற்க முடியாது.
தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அரசியலாக்கி, விவாதப் பொருளாக்கி தமிழக மக்களை தண்டிக்கும் போக்கை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.