தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயர வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத் தேவைக்காக கடந்த 15-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, மேலூர், திருமங்கலம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 1 லட்சத்து 5 ஆயிரத்து 5 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
வினாடிக்கு 1,130 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 7 முக்கிய மதகுகள் வழியாக பாசன கால்வாய்கள் வழியாக செல்கிறது. பாசனக் கால்வாய் மூலம் அதிகபட்சமாக 2,000 கனஅடி தண்ணீர் திறக்க முடியும். தற்போது 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கால்வாயில் தண்ணீர் நிரம்பி வருகிறது.
எனவே, யாரும் கால்வாயில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதே நேரத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் வைகை அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது.