ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார். 1978-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி வெளியான ‘பிராணம் கரீது‘ படத்தின் மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமான சிரஞ்சீவி, கறுப்பு வெள்ளைப் பட காலத்தில் தொடங்கி தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகிறார்.
தற்போது தனது 156-வது படமான ‘விஸ்வம்பரா‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான அதே தேதியில் சிரஞ்சீவிக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி இதுவரை 45 வருடங்களில் 156 படங்களில் 537 பாடல்களில் 24000 நடன மெட்டுகளை பாடியுள்ளார். ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை விருது வழங்கும் விழாவில் அவருக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை பாலிவுட் நடிகர் அமீர் கானிடம் இருந்து சிரஞ்சீவி பெற்றார். விருது பெற்ற சிரஞ்சீவி ”என் திரையுலகப் பயணத்தில் கின்னஸ் சாதனை படைப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இது ஒரு தற்செயல் நிகழ்வு. எனது தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் எனது அன்பான ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு நடிப்பை விட நடனத்தில் ஆர்வம் அதிகம். அதனால்தான் எனக்கு இந்த விருது கிடைத்திருக்கலாம்” என்றார் இதையடுத்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தங்களது எக்ஸ் பக்கத்தில் சிரஞ்சீவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.