சென்னை: தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் முதற்கட்டமாக மினி டைடல் பூங்கா அமைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை மாநிலம் முழுவதும் செயல்படுத்த மினி டைடல் பார்க் அமைக்கப்படுகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மற்றும் தஞ்சை, சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் மாதம் வணிகவரி மற்றும் தொழில் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில், இதற்கான முதற்கட்ட பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
கரூர், திருவண்ணாமலையில் மினி டைடல் பார்க் அமைப்பதற்கான வரைபடம் தயாரித்தல் மற்றும் திட்ட மேலாண்மை பணிகளுக்கான ஆலோசகர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐடி துறையில் 500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.