சென்னை: வடகிழக்கு பருவமழை காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்காக பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:-
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், மழைக்காலத்தில் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, பள்ளிகளில் மின் இணைப்புகளை கண்காணித்தல், வாய்க்கால்களை சுத்தம் செய்தல், திறந்தவெளி கால்வாய்களை மூடுதல், பள்ளங்களை அடைத்தல், மாணவர்களின் பாதுகாப்பை பாதிக்கும் மரக்கிளைகளை அகற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பள்ளி மேற்கூரைகளில் தண்ணீர் தேங்குவதை கண்காணித்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாழடைந்த கட்டிடங்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இதுபோன்ற கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களை ஏரி, ஆறு, குளங்களில் குளிக்க அனுமதிக்கக் கூடாது என்றும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் நீர்நிலைகளுக்கு அருகில் வேடிக்கை பார்க்க அனுமதிக்கக் கூடாது என்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மாணவர்கள் சைக்கிளில் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகவும் ஈரமாக காணப்படுகிறது. எனவே சுற்றுச்சுவரின் உறுதித்தன்மையை கண்காணிக்க வேண்டும். மேலும், சேதமடைந்த சுற்றுச்சுவர்களை சுற்றி வேலி அல்லது தடுப்பு அமைக்க வேண்டும்.
மேலும், மின் இணைப்புகளில் கசிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டிகள், திறந்தவெளி கிணறுகள், சாக்கடை கால்வாய்கள், தரைமட்ட தொட்டிகள் இருந்தால், அவற்றை மூடி வைக்க வேண்டும்.
பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் நோய்களில் இருந்து (டெங்கு, சிக்குன்குனியா உட்பட) மாணவர்களை பாதுகாப்பதற்கான முறையான அறிவுரைகளை வழங்குவது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.