கும்பகோணம்: கணிதத்தில் தனக்கு நிகர் யாருமில்லை என்று ஒப்பிட முடியாத அசாத்திய சாதனைகளை செய்து. நிகரில்லாத கணிதச் சூத்திரங்களை மனிதகுலத்துக்கு அளித்த கணிதமேதை ஸ்ரீநிவாச ராமானுஜன் வாழ்ந்த வீட்டுக்கு ஒரு விசிட்டை போடுங்கள்.
சீனிவாசன் – கோமளம் தம்பதிக்கு 1887-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி ஈரோட்டில் பிறந்தார் ராமானுஜன். இவர் பிறந்தது ஈரோடாக இருந்தாலும் இளமைக் காலத்தின் பெரும்பகுதி இவருடைய பூர்வீக ஊரான கும்பகோணத்தில்தான் கழிந்தது என்பது நினைவுப்படுத்த வேண்டிய ஒன்று.
இந்த உலகில் 33 ஆண்டுகளே வாழ்ந்த ராமானுஜன் வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுபிடித்தார். 1914ம் ஆண்டு முதல் 1918-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய கணிதத் தேற்றங்களை ராமானுஜன் கண்டுபிடித்தார் என்றால் வியப்புதானே. அதுவும் யாருடைய உதவியும் இல்லாமல் என்பதும் குறிப்பிட வேண்டிய முக்கிய மான விஷயம்.
அடிப்படை இயற்பியல் முதல் மின்தொடர்புப் பொறியியல் வரை எனப் பல்துறைகளின் உயர்மட்ட ஆய்வில் ராமானுஜனின் சூத்திரங்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. கும்பகோணத்தின் நடுநாயகமாக விளங்கும் புகழ்பெற்ற சாரங்கபாணி கோவில் அருகே சன்னதித் தெருவில்தான் இருக்கு கணித மேதை ராமானுஜன் வாழ்ந்த வீடு.
19ம் நூற்றாண்டை சேர்ந்த சின்னஞ்சிறிய இந்த வீட்டில் வாழ்ந்த ராமானுஜன்தான் பிற்காலத்தில் கேம்பிரிட்ஜுக்குப் சென்றார். பெரும் பெருமைகளை சம்பாதித்த ராமானுஜனின் வீடு மிகச்சிறியது. கணிதத்தின் மிகப் பெரிய உண்மைகளைக் கண்டறிந்து உலகறியச் செய்த கணிதமேதை வாழ்ந்த வீட்டை பார்க்க வெளிநாட்டு பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ராமானுஜனின் தாய்வழித் தாத்தா வேலைபார்த்த கடை 1891-ல் காஞ்சிபுரத்திற்கு இடம்மாறியதால், இவர் குடும்பமும் காஞ்சிபுரத்துக்கு வந்தது. 1892-ல் காஞ்சிபுரத்திலிருந்த தொடக்கப்பள்ளி ஒன்றில்தான் ராமானுஜன் கல்வி பயின்றார்.
1894-ல் அவரது குடும்பம் கும்பகோணத்திற்கு இடம்பெயர்ந்தது. அங்கு கல்யாணம் தொடக்கப் பள்ளியில் ராமானுஜன் கல்வியைத் தொடர்ந்தார். மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று, 1897-ல் தொடக்கக் கல்வியை நிறைவுசெய்தார் ராமானுஜன். 1897-ம் ஆண்டில் கும்பகோணம் நகர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தொடங்கிய ராமானுஜனின் கணிதப் பயணம், கேம்பிரிட்ஜ் வரை மிகப்பெரிய நீண்ட பயணமாக பயணித்தது. உலகப் புகழ்பெற்ற கணித மேதையின் ஆரம்ப காலங்கள் நினைவுகளாக உலா வரும் இந்த வீட்டில் 2003-ம் ஆண்டு வரை வெவ்வேறு நபர்கள் வசித்து வந்தனர்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர், ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் முயற்சியால்தான் ராமானுஜன் வாழ்ந்த வீடு பாதுகாக்கப்பட்டது. தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகம் இப்போது இந்த வீட்டை நிர்வகித்து வருகிறது. கணித மேதை வாழ்ந்த இந்த வீட்டுக்கு ஒரு விசிட்டை போடுங்கள். செல்பி எடுத்து நம் கணித மேதையின் புகழை இன்னும் உயர்த்துங்கள்.