சென்னை: 2011-15 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோகுமார் உள்ளிட்ட 47 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 2015, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் 3 மோசடி வழக்குகளைப் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளின் விசாரணை சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர். அவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
அப்போது, அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட பிறகு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று கூறி விசாரணையை அக்டோபர் 24-ம் தேதிக்கு நீதிபதி ஜி.ஜெயவேல் ஒத்திவைத்தார்.