புதுடெல்லி: டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்ததற்கு முக்கிய காரணமான விவசாய கழிவுகளை எரிப்பதை தடுக்க தவறிய பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கும், காற்று தர மேலாண்மை ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் மனிதர்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்றின் தரம் மாசடைந்து வருகிறது. இதற்கு வாகனங்கள் அதிகரிப்பு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை என பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் அதிக அளவில் எரிக்கப்படுவதும் பெரும் பிரச்னையாக உள்ளது.
முக்கியமாக அடர்ந்த பனிமூட்டமான குளிர்காலத்தில் மேற்கூறிய காரணங்களால், சமீப காலங்களில் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியதாவது:-
டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் நிபுணர்களை ஒன்றிணைத்து ஆகஸ்ட் 29-ம் தேதி நடந்த வட்டமேசை மாநாட்டில் 11 முக்கிய உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
அப்போதும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து விவாதிக்கப்படவில்லை. இது தவிர மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பது தெரியவந்துள்ளது. இப்படி இருந்தால், குளிர்காலத்தில் விவசாயக் கழிவுகளை எரிப்பதையும், அது தொடர்பான காற்று மாசு பிரச்னையையும் எப்படி கட்டுப்படுத்துவது?
டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களில் முறையான உறுப்பினர்கள் இல்லாததால், அவற்றின் கீழ் உள்ள துணை கமிஷன்கள் செயலிழக்கும்.
எனவே, இங்குள்ள காலிப் பணியிடங்களை 2025 ஏப்ரல் 30-ம் தேதிக்குள் நிரப்ப வேண்டும். விவசாய கழிவுகள் விவகாரம் தொடர்பாக காற்று தர மேலாண்மை ஆணையம் இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை. மாசு பிரச்சனையை குறைக்க உரிய முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
நீங்கள் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தேசத்தின் தலைநகரின் காற்றில் தெரிகிறது. விவசாயக் கழிவுகளை எரிப்பது தொடர்பாக அடுத்த 7 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய காற்றுத் தர மேலாண்மை ஆணையத்துக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடுத்த விசாரணை அக்., 16-ல் நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.