பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மராத்தி, பாலி, பிராகிருதம், அஸ்ஸாமி, பெங்காலி ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கிடையில், சமையல் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க ரூ.10,103 கோடி செலவில் சிறப்புத் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 5 மொழிகள் இணைந்துள்ளன. இந்தியாவில் 57% சமையல் எண்ணெய் நுகர்வு வெளி நாடுகளில் இருந்து பெறப்படுகிறது. இதனை குறைக்கும் வகையில் உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
விவசாய மேம்பாடு மற்றும் உணவு பாதுகாப்புக்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான இரண்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இதன் மூலம் 11 லட்சத்து 72 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள்.
இதையடுத்து 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். மாநில மொழிகளுக்கு அந்தஸ்து வழங்கியதற்கு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.