மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். ஒரு நாள் சுற்றுப்பயணமாக மகாராஷ்டிரா மாநிலம் வந்த அவர், காலையில் நான்டெட் விமான நிலையத்தை அடைந்த பிறகு ஹெலிகாப்டர் மூலம் வாஷிம் பகுதியை அடைந்தார். அங்கு, ஜகதம்பா மாதா கோவிலில் தரிசனம் செய்த பின்னர், சந்த் செவலால் மகாராஜ் மற்றும் சந்த் ராமராவ் மகாராஜ் ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு, பஞ்சாரா சமூகத்தின் பெருமையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பஞ்சாரா விராசத் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி முக்கிய பங்கு வகித்தார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 9.4 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை பிரதமர் மோடி வழங்கினார்.
இத்திட்டத்தின் மூலம் இதுவரை விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.3.45 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நமோ ஷேத்காரி மகாசன்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2,000 கோடி நிதியையும் பிரதமர் மோடி வழங்கினார்.
இது தவிர, ரூ.1,920 கோடி மதிப்பிலான 7,500க்கும் மேற்பட்ட விவசாய உள்கட்டமைப்பு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். 9,200 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) தொடங்கப்பட்டு, மொத்த வருவாய் சுமார் ரூ.1,300 கோடி.
மேலும், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைகளுக்கு ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களும் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இறுதியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 19 மெகாவாட் திறன் கொண்ட 5 சோலார் பூங்காக்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.