ஊட்டி : ரத்த அழுத்தத்தைச் சீராக்கும் இதயத்தின் நண்பன் என்றழைக்கப்படும் ‘பேஷன்’ பழம் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைகிறது.
இதில் மெக்னீசியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் இப்பழங்களை பருப்புடன் சேர்த்து சாப்பிடும்போது ரத்த நாளங்களில் உள்ள கொழுப்புகள் உறிஞ்சப்படுகிறது.
இதன் காரணமாக, இரத்தத்தில் கொழுப்பு குறைகிறது. மேலும், இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவுகிறது. மனச்சோர்வு, பதட்டம் போன்ற நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.
இந்தப் பழங்களின் மகிமையை அறிந்த ஒரு சிலர் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். சீசன் காலங்களில் இப்பழங்கள் கிலோ ரூ.200 வரை விற்பனையாகிறது.
ஆனால் தற்போது கிலோ ரூ.400 வரை விலை உயர்ந்துள்ளது. தற்போது ஊட்டியில் சாலையோரங்களிலும், கடைகளிலும் இப்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பலர் இந்த பேஷன் பழங்களை அதிகமாக வாங்குகிறார்கள்.