புதுடெல்லி: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது, அங்கிருந்து பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் உதவியுடன் செயற்கைக்கோள்கள் ஏவப்படுகின்றன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் கூறியதாவது: ஸ்ரீஹரிகோட்டாவில் தற்போது 2 ஏவுதளங்கள் உள்ளன. பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகிறது.
இந்த ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை ஏவ முடியாது. பிஎஸ்எல்வி ராக்கெட்டுக்காக இரண்டாவது ஏவுதளம் உருவாக்கப்பட்டது. இந்த ஏவுதளத்தில் பல்வேறு மாற்றங்களுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் ஏவப்படுகின்றன.
2-வது ஏவுதளத்தில் எதிர்பாராதவிதமாக ராக்கெட் வெடித்தால் ஏவுதளம் சேதமடையும். ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை ஏவ முடியாது. இஸ்ரோவின் அனைத்து விண்வெளி திட்டங்களும் தாமதமாகும்.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜிஎஸ்எல்வி மட்டுமின்றி, என்ஜிஎல்வி (புதிய தலைமுறை ராக்கெட்) ராக்கெட்டுகளையும் விண்ணில் செலுத்தும் வசதியுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் மகேந்திரகிரி மையம் போன்று சோதனை மையமும் ஏவுதளத்தில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
என்ஜிஎல்வி ராக்கெட் தயாரிப்பு திட்ட இயக்குனர் சிவக்குமார் கூறும்போது, “20 டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன என்ஜிஎல்வி ராக்கெட்டை உருவாக்கும் பணியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த ராக்கெட் 3 நிலைகளைக் கொண்டிருக்கும். முதல் கட்டத்தை மீண்டும் பயன்படுத்தலாம்.” ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 3-வது ஏவுதளத்தை அமைக்க தேசிய விண்வெளி ஆணையம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவையும் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.