நாக்பூர்: மகாராஷ்டிரா சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட சில திட்டப்பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
மேலும் சில புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7,600 கோடி. குறிப்பாக, 10 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கில்ஸ் (ஐஐஎஸ்) மும்பை, மகாராஷ்டிரா வித்யா சமிக் ஷா கேந்திராவை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
அதேபோல், நாக்பூரில் உள்ள டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்தின் மேம்பாடு மற்றும் சீரடி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் கட்டுவது ஆகியவை அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களில் குறிப்பிடத்தக்கவை.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:- மகாராஷ்டிராவில் புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்படுவதன் மூலம் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும்.
காங்கிரஸ் கட்சி சமூகத்தை பிளவுபடுத்துவதற்கான சூத்திரங்களைக் கொண்டுள்ளது. வாக்காளர்களை தவறாக வழிநடத்த ஒருபோதும் தயங்க மாட்டார்கள். அவர்களின் உத்தி தெளிவாக உள்ளது.
முஸ்லிம்களை அச்சத்தில் வைத்து அச்சத்தை காட்டி அவர்களின் வாக்குகளை பலப்படுத்துவதுதான். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூட முஸ்லிம் சமூகத்தில் உள்ள பல்வேறு சாதிகளைப் பற்றிப் பேசுவதில்லை.
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. ஹரியானா தேர்தல் முடிவுகள் நாட்டு மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. அங்கு தொடர்ந்து 3-வது முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.
மக்களை திசை திருப்ப காங்கிரஸ் மற்றும் நகர்ப்புற நக்சல்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. தலித் மக்களிடையே தவறான தகவல்களை பரப்ப முயன்றனர். ஆனால் தலித்துகள் அவர்களின் நோக்கத்தை புரிந்து கொண்டனர்.
இடஒதுக்கீட்டைப் பறித்து வாக்கு வங்கியைப் பிரிக்க காங்கிரஸ் விரும்புகிறது என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். ஹரியானா விவசாயிகள் மத்தியிலும் காங்கிரஸ் பொய்களைப் பரப்ப முயன்றது.
ஆனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) நிர்ணயித்தது யார் என்பது தெரியும். பாஜக அரசின் நலத்திட்டங்களால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காங்கிரஸ் இளைஞர்களின் வாக்குகளை கவர முயன்றது. ஆனால் அவர்கள் எங்களை நம்பி வாக்களித்துள்ளனர். அதேபோல், பிரிவினை முயற்சியை மகாராஷ்டிர மக்கள் முறியடிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.