திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவின் 6-ம் நாளான நேற்று அனுமன் வாகனத்தில் உற்சவர் மலையப்பர் மாதா வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த வாகன சேவையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மாட வீதிகளில் நடைபெற்றன. யானை, குதிரை, காளை வட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வாகன சேவை சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஜீயர்ஸ், தேவஸ்தான அதிகாரிகள் சியாமளா ராவ், வெங்கையா சவுத்ரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதியம் ரங்கநாயக மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சன சேவை நடந்தது. பின்னர் மாலை 4 மணி முதல் 5 மணி வரை தங்க ரத ஊர்வலம் நடைபெற்றது.
இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பர் தங்க ரதத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது திரளான பெண் பக்தர்கள் தேர் வடம் பிடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நேற்று இரவு உற்சவர் மலையப்பர் காரில் எழுந்தருளினார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடந்த வாகன சேவையில் திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டனர்.