ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வடபெருங்கோயிலுடையோன் புரட்டாசி பிரம்மோத்ஸவத்தில் இன்று (சனிக்கிழமை) காலை செப்பு ரத ஊர்வலம் நடந்தது.
108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், மூலவர் வடபத்ரசாயி (பெரியாழ்வார், ஆண்டாள்) ஆகிய மூன்று அவதாரங்களின் சிறப்பு காரணமாக முப்புரி ஊட்டிய தலம் என்று அழைக்கப்படுகிறது.
பெரிய பெருமாள் அவதாரமான புரட்டாசி திருவோணம், பெரியாழ்வாரின் அவதாரமான ஆனி சுவாதி, ஆண்டாளின் அவதாரமான ஆடிப்பூரம் ஆகியவை கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன.
இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோத்ஸவ விழாவில் தினமும் இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் 5-ம் நாளான அக்டோபர் 8-ம் தேதி கருட சேவையும், 9-ம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 10-ம் தேதி சயன சேவையும் நடந்தது.
9-ம் நாளான நேற்று காலை பெரிய பெருமாள் அவதரித்த திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு செப்பு தேர் நடந்தது. முன்னதாக ஸ்ரீ தேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதைத்தொடர்ந்து, செப்பு ரதத்தில் சர்வ அலங்காரத்தில் பெரிய பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சியளித்த ரத ஊர்வலம் நான்கு ரத வீதிகள் வழியாக நடைபெற்றது. வைணவ ஆச்சாரியார்கள் திருப்பல்லாண்டு முழங்க, ஊர்வலமாக செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கடராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் சக்கரையாமாள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர்.