அண்ணாநகர்: கோயம்பேடு சந்தை வளாகம், கோயம்பேடு பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்காக ₹84 லட்சம் மதிப்பில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
இப்பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். பின்னர், சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம் மற்றும் அங்காடி நிர்வாகக் குழு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின், கோயம்பேடு வணிக வளாகத்தில் அமைக்கப்பட உள்ள மழைநீர் வடிகால் திட்டத்தை பார்வையிட்டார். ஆய்வின்போது, சென்னை வளர்ச்சிக்குழு உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, சென்னை மாநகராட்சி மண்டல வருவாய் கோட்டாட்சியர் பிரவீன், அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி, பொறியாளர்கள் பாலமுருகன், ராஜன்பாபு, பெரியசாமி, உதவி பொறியாளர் வீரராகவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோயம்பேடு மொத்த விற்பனைக் கடையில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வாக 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் அமைப்பு தொடங்கப்பட உள்ளது.
கோயம்பேடு மொத்த கடையில் தற்போதுள்ள 850 மீட்டர் நீளமுள்ள மழைநீர் கால்வாயை சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது கோயம்பேடு மார்க்கெட் அருகே மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால், இப்பணிகள் நிறைவடைந்த பின், 770 மீட்டர் நீளத்துக்கு புதிதாக கட்டப்படும் கால்வாய் பணி தொடங்கப்படும்.
கடும் வெள்ளத்தின் போது கோயம்பேடு கடையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 60 எச்பி திறன் கொண்ட ராட்சத மோட்டார்களை உடனடியாக பொருத்த உத்தரவிட்டுள்ளேன்.
மழைக்காலத்தில் காய்கறி மார்க்கெட்டில் தேங்கும் காய்கறி கழிவுகளை உடனடியாக அகற்ற கூடுதலாக 20 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். காய்கறி கழிவுகளால் ஏற்படும் சமூக சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் முதலமைச்சர் பணியை மேற்கொண்டு வரும் வேளையில், சொந்த குடும்பத்தை இழந்த நிலையிலும் மக்களுக்கு பிரச்சனை ஏற்படும் போது துணை முதலமைச்சர் 3-வது நாளாக ஓய்வின்றி களப்பணியாற்றி வருகிறார்.
இரண்டு நாட்களாக அவரது மாமா இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட நிலையில், நேற்று இரவு ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரது செயல் எங்களை போன்ற அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக உள்ளது என்றார்.