மும்பை: வயது மூப்பு காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா கடந்த 9-ம் தேதி காலமானார்.
அவர் இறந்ததையடுத்து, 10-ம் தேதியை மாநில அரசு துக்க நாளாக அனுசரித்தது. மேலும் ரத்தன் டாடாவின் உடல் கடந்த 10-ம் தேதி அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
அன்றைய தினம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அமைச்சரவை கூட்டத்தில் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, ரத்தன் டாடாவின் சமூகப் பங்களிப்பைப் போற்றும் வகையில், மகாராஷ்டிரா மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகத்தின் பெயரை “ரத்தன் டாடா மகாராஷ்டிரா மாநில திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம்” என மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.