சென்னை: ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதில் அக்கறை இல்லையா என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் இணையதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி குலசேகரன் தலைமையில் கடந்த அரசு ஆணையம் அமைக்கப்பட்டது.
அதன்பின், ஆட்சிக்கு வந்த தி.மு.க., கமிஷனுக்கு 6 மாதங்கள் கூட நீட்டிப்பு வழங்கவில்லை. அப்படி வழங்கியிருந்தால் இந்நேரம் தமிழகத்தில் சாதிவாரியான புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கும்.
அவ்வாறு நீட்டிப்பு வழங்காதது ஏன் என்பது குறித்து தமிழக மக்களுக்கும், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் செயல்தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.
இது தவிர, 2011-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் உதவியுடன் மாநில அரசுகளால் சமூக-பொருளாதார ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் 99.3 சதவீதம் பணிகள் 2013-ல் முடிவடைந்த போதிலும், மத்திய காங்கிரஸ் அரசு கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடவில்லை என்பதையும் தமிழக முதல்வருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு விருப்பமில்லையா? இவ்வாறு அவர் கூறினார்.