காஷ்மீரில் 3 கட்டமாக நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 55 இடங்களை தேசிய மாநாட்டு – காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. ஐந்து சுயேச்சை எம்எல்ஏக்களும், ஆம் ஆத்மி எம்எல்ஏ ஒருவரும் தேசிய மாநாட்டிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர். கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதத்துடன் கவர்னர் மனோஜ் சின்ஹாவை உமர் அப்துல்லா கடந்த 11ம் தேதி சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனை ஏற்று புதிய ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் விழாவில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்வராக உமர் அப்துல்லா முதல்முறையாக பதவியேற்கிறார்.
அரியானா முதல்வர் தேர்வு இன்று. ஹரியானா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 இடங்களில் பாஜக வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது.
காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றி பெற்றது. புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. புதிய முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.