புதுடெல்லி: காவிரி மேலாண்மை குழுவின் 105வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது. தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் காணொலி மூலம் பங்கேற்றனர்.
இதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற திருச்சி சி.இ.தயாளகுமார் கூறியதாவது: காவிரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரை கணக்கில் கொள்ளக் கூடாது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி குடிநீர் வழங்க வேண்டும். குறிப்பாக புதுவை மாநிலத்தில் உள்ள காரைக்காலுக்கு தமிழகம் தரப்பில் வழங்கப்படும் தண்ணீரை விட கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் அக்டோபர் 13-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 131.619 டி.எம்.சி. அடி நீருக்கு பதிலாக 215.586 டி.எம்.சி. கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து கர்நாடக அரசு உறுப்பினர்கள் கூறியதாவது: மாநிலத்தில் தண்ணீர் இருப்பை பொறுத்து காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடலாம். இதையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மைய உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: 2024-2025ம் ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை ஜூன் 1 முதல் அக்டோபர் 10ம் தேதி வரை காவிரி படுகையில் இயல்பை விட சற்று கூடுதலாக மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ஆம் தேதி (நேற்று) தொடங்கியுள்ளது. காவிரி படுகையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார். இதையடுத்து புதுவை, கேரள மாநில உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். எல்லாவற்றையும் பதிவு செய்துவிட்டு, வரும் நாட்களில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு கர்நாடக அரசும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு தமிழக அரசும் மாதந்தோறும் தண்ணீர் வழங்க வேண்டும் என ஒழுங்குமுறைக் குழுத் தலைவர் அறிவுறுத்தினார். அதன் பின்னர் அடுத்த கூட்டத்தில் நிலைமையை ஆராயலாம் என்று கூறிய அவர், அடுத்த கூட்டத்தை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.