தஞ்சாவூர்/ திருவாரூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. அதே நேரத்தில் மாவட்டம் முழுவதும் சம்பா சாகுபடி மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், ஒரத்தநாடு அருகே குளமங்கலம், சமயன்குடிக்காடு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 100 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வடுவூர் ஏரியில் இருந்து துவங்கும் கண்ணனாறு மூலம் குளமங்கலம், சமயங்குடிக்காடு, மதுக்கூர், பெரியகோட்டை பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதில் குளமங்கலம், சமயன்குடிக்காடு பகுதி வழியாக செல்லும் கண்ணனாற்றில் மழைநீர் மற்றும் பாசன நீரால் வெங்காயச் செடி, கொடிகள் படர்ந்து தேங்கி நிற்கிறது. இதனால், மழைநீர் வடியாமல், அருகில் உள்ள வயல்களில் தண்ணீர் புகுந்ததால், 20 நாட்களுக்கு முன் பயிரிடப்பட்ட இளம் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
மேலும் குளமங்கலம் கண்ணனாரின் மேற்கு கரையும் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் மன்னார்குடி அருகே மகாதேவப்பட்டினம் பகுதியில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த இளம் சம்பா பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.
வாய்க்கால்களை சுத்தம் செய்யாததே இதற்கு காரணம் என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மேலும், பல்வேறு இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் அரக்கோணத்தில் இருந்து கமாண்டர் சஞ்சீவ் தேஸ்வால் தலைமையிலான 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை நேற்று காரைக்கால் சென்றடைந்தது.
அவர்களை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் சந்தித்து பேசினார்.