புதுடெல்லி: “மத்ரஸாக்களை மூட வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் கோரவில்லை, ஏழை முஸ்லீம் குழந்தைகளின் கல்வியை அவர்கள் பறிப்பதால் அவர்களுக்கு அரசு நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்று மட்டுமே நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்” என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்சிபிசிஆர்) தலைவர் பிரியங்க் கனுங்கோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “முஸ்லிம்கள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என்று பயப்படும் ஒரு பிரிவினர் நம் நாட்டில் உள்ளனர். அதிகாரம் பெற்ற சமூகங்கள் பொறுப்புக்கூறல் மற்றும் சம உரிமைகளைக் கோருவதால் இத்தகைய அச்சங்கள் எழுகின்றன.
இதுவே கல்விச் சீர்திருத்தங்களை எதிர்ப்பதற்கு முதன்மையான காரணம். மதரஸாக்கள் மூடப்படுவதை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. வசதியான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை வழக்கமான கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்புகின்றனர்.
ஏழைக் குழந்தைகளும் அதே கல்வியைப் பெற வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. குழந்தைகள் சீரான கல்வியைப் பெறுவதை உறுதி செய்வது அரசின் கடமை. அரசாங்கம் பாராமுகமாக இருக்க முடியாது.
ஏழை முஸ்லீம் குழந்தைகள் பெரும்பாலும் மதச்சார்பற்ற கல்விக்கு பதிலாக மதரஸாக்களில் சேர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால், அவர்களின் வாய்ப்புகள் பறிபோகும்.
ஏழை முஸ்லீம் குழந்தைகளை பள்ளிகளுக்குப் பதிலாக மதரஸாக்களுக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்துவது ஏன்? இந்தக் கொள்கை அவர்கள் மீது நியாயமற்ற முறையில் திணிக்கப்பட்டுள்ளது.
1950-ம் ஆண்டு அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பிறகு, நாட்டின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா ஆசாத் உத்தரபிரதேசத்தில் உள்ள மதரஸாக்களுக்குச் சென்று பள்ளி மற்றும் கல்லூரிகளில் முஸ்லிம் குழந்தைகள் உயர்கல்வி படிக்கத் தேவையில்லை என்று அறிவித்தார்.
இதனால் உயர்கல்வியில் முஸ்லிம் மாணவர்களின் பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறைந்துள்ளது. உயர்கல்வி படிக்கும் மாணவர்களில் 13 முதல் 14% பேர் பட்டியல் சாதியினர் (SC).
ஐந்து சதவீதத்திற்கும் அதிகமானோர் பட்டியல் பழங்குடியினர் (ST) 20 சதவீத SC மற்றும் ST மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்கின்றனர். உயர்கல்வி மக்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) 37 சதவீதம் பேர் உள்ளனர்.
அதே சமயம் 5 சதவீத முஸ்லிம்கள் மட்டுமே உயர்கல்வியில் உள்ளனர். அங்கீகாரம் இல்லாத மதரஸாக்களில் படிக்கும் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க பரிந்துரை செய்துள்ளோம்.
கேரளா போன்ற சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், குஜராத் போன்ற மாநிலங்கள் சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. எதிர்ப்புகளை மீறி குஜராத்தில் மட்டும் 50,000 குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
இன்னும் 10 வருடங்களில் இந்த முஸ்லீம் குழந்தைகள் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், வங்கியாளர்களாகவும் மாறுவார்கள். அவர்கள் எங்கள் முயற்சிகளை உறுதிப்படுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.