சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 17-ம் தேதி காலை சென்னை அருகே கரையை கடந்தது.
நேற்று முன்தினம், 16-ம் தேதி, சென்னை உட்பட பல இடங்களில் கனமழை பெய்தது. இன்று (18/10/2024) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புயலாக மாறினால், வடக்கு நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை.
அதேபோல், அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இந்திய பகுதியில் இருந்து நகர்ந்து செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.