நீலகிரி: நீலகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் முக்கிய மலை சுற்றுலா தலமாகும். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி போன்ற இடங்கள் இங்கு பிரபலமான சுற்றுலா தலங்களாகும்.
இங்குள்ள இதமான காலநிலையை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் சேவை மிகவும் பிரபலமானது.
இந்தப் பயணத்தில் அழகிய இயற்கைக் காட்சிகளும் நம் கண்களுக்கு விருந்தளிக்கும். ஊட்டி மலை ரயில் உலகப் புகழ்பெற்ற பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
இந்த ரயிலில் பயணம் செய்ய உள்ளூர் முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம். இந்நிலையில், மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே உள்ள மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, ரயில்வே நிர்வாகம், கடந்த, 16, 17 ஆகிய இரு தேதிகளில், மலை ரயிலை ரத்து செய்தது. மழை நின்றதை அடுத்து, இன்று முதல், மலை ரயில் சேவை துவங்கியது. காலை, 7:10 மணிக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டது. இதில், 150 சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.