சென்னை: சட்டசபையில் நேற்று எரிசக்தி துறை, நிதித்துறை, பொதுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கோவை தெற்கு தொகுதியை சேர்ந்த வானதி சீனிவாசன் (பா.ஜ.க.) பங்கேற்று பேசியதாவது:-
கோவையில் ஒரு ரூபாய் வரி வருவாய் வந்தால் எவ்வளவு ரூபாய். கோவைக்கு கொடுக்கவா? தர்மபுரியில் இருந்து ஒரு ரூபாய் வரி வருவாய் வந்தால், தர்மபுரிக்கு எவ்வளவு ரூபாய் தருகிறீர்கள்?
மாநிலத்திற்கு மாநிலம் இப்படி பேசுவது தவறு என்று நான் சொல்லவில்லை. மாவட்ட வாரியாக, ஒரு ரூபாய் வரி கட்டினால், எவ்வளவு திருப்பி தருகிறீர்கள் என்ற பதிலை தர வேண்டும்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு போடுவதில்லை.
வானதி சீனிவாசன்: தமிழகம் 2004 முதல் 2014 வரை பெற்ற நிதியுதவியை விட தற்போது 300 சதவீதம் கூடுதல் நிதியுதவி பெற்றுள்ளது.
அமைச்சர் கே.என்.நேரு: கோவை நகராட்சிக்கு இதுவரை சாலைகளுக்கு மட்டும் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொல்லியல் பூங்காவுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கோவையில் மழைநீர் வடிகால் அமைக்கும் புதிய திட்டம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. செம்மொழி மாநாடு நடத்தும்போது கோவைக்கு மட்டும் 1000 கோடி ரூபாய் கொடுத்தார் கலைஞர்.
கோவையில் இன்று நிலவும் பணிகள் அனைத்தும் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டவை. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாநகராட்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.