புதுடெல்லி: டெல்லியில் சுகாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான நகர மேம்பாடு ஆகிய துறைகளை மையமாக வைத்து 3 AI சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும் என்றும், ரூ.990 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் AI ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் இந்தியாவை வலுவான நாடாக மாற்ற இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்த சிறப்பு மையங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
அவர் மேலும் கூறுகையில், “AI செண்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மக்களின் வளர்ச்சிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் துணைபுரியும். அதன் மூலம், நவீன வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்,” என்றார்.
இந்த மையங்கள் மூலம் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த AI சிறப்பு மையங்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்புடன், இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் தலைமையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பங்களிப்போடு செயல்படும்.
எய்ம்ஸ் மற்றும் டெல்லி சுகாதாரத் துறைக்கான AI சிறப்பு மையத்திற்கும், ஐஐடி ரோபார் விவசாயத் துறைக்கான AI சிறப்பு மையத்திற்கும். ஐஐடி கான்பூர், நிலையான நகர்ப்புற திட்டங்களில் AI-க்கான சிறப்பு மையத்தையும் வழிநடத்தும். AI சிறப்பு மையங்களை அமைப்பதை மேற்பார்வையிட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன் துணைத் தலைவராக சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு நியமிக்கப்பட்டுள்ளார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வரும் நிலையில், அந்த இலக்கை எட்டுவதில் AI மையங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.